

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலம், தாளவாடியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி - திம்பம் இடையிலான மலைச்சாலையில், வனவிலங்குகளின் பாதுகாப்பு கருதி, இரவு நேர வாகனப்போக்குவரத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தடை உத்தரவால் பாதிக்கப்படும் மலைப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு தளர்வுகளையும் உயர் நீதிமன்றம் அளித்துள்ளது.
அதே நேரத்தில், திம்பம் சாலையில், 16.2 டன்னுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வரும் லாரிகள் மற்றும் 12 சக்கர லாரிகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஆட்டோக்கள், லாரிகள் இயங்கவில்லை. இதேபோல் தாளவாடியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.
இதனிடையே, பண்ணாரி சோதனைச் சாவடி அருகே லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தால், சத்தியமங்கலம், தாளவாடியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.