Published : 05 Apr 2016 02:55 PM
Last Updated : 05 Apr 2016 02:55 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில் சீட் கிடைக்காத அதிமுகவினர் ஏமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த முறை அதிமுகவில் பரமக்குடி (தனி) தொகுதியில் டாக்டர் சுந்தரராஜ், முதுகுளத்தூர் தொகுதியில் எம்.முருகன் வெற்றி பெற்றனர். ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார். திருவாடானை தொகுதியில் திமுக வேட்பாளர் சுப.தங்கவேலன் வெற்றி பெற்றார்.

மாவட்டத்தில் கடந்த முறை வெற்றி பெற்ற 2 பேருக்கும் சீட் வழங்கப்படவில்லை. மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீ ர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் போன்றோர் மீது கட்சித் தலைமைக்கு அதிருப்தி ஏற்பட்டதால், பழைய அமைச்சர்கள் யாருக்கும் சீட் வழங்கப்படமாட்டாது எனப் பேசப்பட்டது. அந்த வரிசையில் பரமக்குடி தொகுதிக்கும் அமைச்சர் சுந்தரராஜுக்கு சீட் கிடைக்காது எனக் கூறினர்.

பரமக்குடி தொகுதிக்கு நேர்காணலுக்கு முன்னாள் எம்எல்ஏ பாலுச்சாமி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் முத்தையா, முன்னாள் போகலூர் ஒன்றியக் குழு தலைவர் பாலாமணி ஆகியோர் சென்றனர். தற்போது டாக்டர் முத்தையாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

அதனால் நேர்காணலுக்கு சென்ற இருவர், நேர்காணலுக்குச் செல்லாத அமைச்சர், முன்னாள் எம்பி நிறைகுளத்தானின் மகன் சதர்ன்பிரபாகர் உள்ளிட்ட பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவட்டச் செயலாளர் தர்மர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சுந்தரபாண்டியன், கமுதி முன்னாள் ஒன்றியச் செயலாளர் காளிமுத்து, பரமக்குடி நகராட்சித் தலைவர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர். இதில் கீர்த்திகா முனியசாமிக்கு சீட் கிடைத்துள்ளது.

நேர்காணலுக்குச் சென்ற மற்ற மூவர், மேலும் மிக எதிர்பார்ப்பில் இருந்த தற்போதைய எம்எல்ஏ முருகன், நடிகர் செந்தில், ஒன்றியக் குழுத் தலைவர்கள் பாலு, மூக்கையா, ஒன்றியச் செயலாளர்கள் மீனாட்சி சுந்தரம், முனியசாமி பாண்டியன், சினிமா தயாரிப்பாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலர் ஏமாற்றம் அடைந்து ள்ளனர். ராமநாதபுரம் தொகுதிக்கு மருத்துவர் அணி மாநிலச் செயலாளர் டாக்டர் மணிகண்டன், மண்டபம் பேரூராட்சித் தலைவர் தங்கமரைக்காயர், முன் னாள் மாவட்டச் செயலாளர் ஜி.முனியசாமி ஆகியோர் நேர்கா ணலுக்கு சென்றனர். இதில் மணிகண்டன் வேட்பாளராக அறிவி க்கப்பட்டுள்ளார்.

நேர்காணலில் பங்கேற்ற மற்ற இருவர் மற்றும் எதிர்பார்ப்பில் இருந்த மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கவிதா சசிக் குமார், ஒன்றியச் செயலாளர் அசோ க்குமார், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வரதன், எம்ஜிஆர் இளைஞர் அணி கீழக்கரை நகர் செயலாளர் சுல்தான், கீழக்கரை நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருவாடானை தொகுதியில் இந்த முறை அதிமுகவுக்கு சீட் கிடைக்கும் என தொண்டர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் கூட்டணிக் கட்சியான முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த நடிகர் கருணாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் மாவட்டச் செயலா ளரும், மாவட்டக் கவுன்சிலருமான ஆணிமுத்து, ஆர்எஸ்மங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் வ.து.ந. ஆனந்த் உள்ளிட்ட நேர் காணலுக்கு சென்ற பலரும் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x