Published : 12 Apr 2022 06:46 AM
Last Updated : 12 Apr 2022 06:46 AM

படிக்கட்டாக பயன்படுத்தப்படும் சோழர் கால கல்வெட்டு: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மலையான்குளம் கோயிலில் படிக்கட்டாக பயன்படுத்தப்படும் சோழர் கால கல்வெட்டு.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ளது மலையான்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 905 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு ஆலய படிக்கட்டாக உள்ளது. இதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் நிருபர்களிடம் கூறியது:

உத்திரமேரூர் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தில் 12 மற்றும் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு கல்வெட்டுகளைக் கண்டறிந்தோம். இந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழர்கள் காலத்தைச் சார்ந்ததாகும். `கலிங்கத்துப் பரணி' என்ற புகழ்பெற்ற நூல் இவரது காலத்தில் இயற்றப்பட்டது. `சுங்கம் தவிர்த்த சோழன்' என்று வரலாற்றில் அறியப்படும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் கீழ் உத்திரமேரூர் சிறிது காலம் இருந்துள்ளது. இவரது 47-வது ஆண்டு ஆட்சியை இந்தக் கல்வெட்டு செய்தி குறிக்கிறது.

இந்த கல்வெட்டில் சிறுகூற்ற நல்லூர் என்ற ஊர் குறித்தும் குறிப்புகள் உள்ளன. தற்போது சிறுமயிலூர் என வழங்கப்படும் ஊரே சிறுகூற்ற நல்லூராக இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம். இதுகுறித்து மேலும் ஆய்வு செய்ய உள்ளோம்.

இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு. இது தற்போது சிவாலயத்தில் படிக்கட்டாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x