Published : 11 Apr 2022 01:27 PM
Last Updated : 11 Apr 2022 01:27 PM

அதிமுகவிலிருந்து சசிகலாவை  நீக்கிய பொதுக்குழு தீர்மானம் செல்லும்: நீதிமன்றம் தீர்ப்பு

வி.கே.சசிகலா | கோப்புப் படம்

சென்னை: சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலளாராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவையும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனையும் தேர்ந்தெடுத்துள்ளதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொதுச் செயலாளர் மூலமாக இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29-ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இருவரின் மனுக்களையும் நிராகிரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதிமுகவின் முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாகவும்,
சசிகலா அதிமுகவிலேயே இல்லை என்கிறபோது கட்சியின் உறுப்பினர்கள் விபரம், சொத்து, வைப்பு நிதி, தலைமை அலுவலகத்தின் சாவி ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்கும் படி கோருவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாகல் செய்யப்பட்டது. இதையடுத்து கட்சியில் பொதுச் செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில், சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்று, சசிகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் செல்லும் என்றும் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x