Published : 11 Apr 2022 12:22 PM
Last Updated : 11 Apr 2022 12:22 PM

கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''18 - 60 வயதுப் பிரிவினருக்கு கரோனா மூன்றாவது (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. இவை தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்படும்; ரூ.375 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமற்றது.

ரூ.375 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட சில மருத்துவமனைகளில் பழைய கட்டணமான ரூ.1450 வசூலிக்கப்படுகிறது. சில மருத்துவமனைகளில் புதிய கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ஏழைகளால் இவ்வளவு தொகை செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியாது.

கரோனா நான்காவது அலை ஜூலையில் தொடங்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் ஓமைக்ரானின் XE திரிபு பரவத் தொடங்கியுள்ளது. அவற்றைத் தடுக்க அனைத்து மக்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்! கரோனாவுக்கான முதல் இரு கட்ட தடுப்பூசிகள் எவ்வாறு இலவசமாக வழங்கப்பட்டனவோ, அதே போல் மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x