

ஆம்பூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தான் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என திமுகவினர் திடீர் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பிரச்சினைகள் அரங்கேறி வருகிறது.
அதிருப்தி வேட்பாளர்கள், வெற்றி பெறும் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது என தினமும் ஒவ்வொரு பிரச்சினைகளை முன்வைக்கும் திமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியது. இதில், ஆம்பூர் தொகுதி மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி சார்பில் நசீர்அகமது போட்டியிடுவதாக மனித நேய மக்கள் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், ஆம்பூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி திமுக தொண்டர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் செய்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனால் திமுக தலைமைக் கழகம் தனது முடிவில் மாற்றம் செய்துக்கொள்ளவில்லை. இதனால், திமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. இதில் தற்போதைய ஆம்பூர் எம்எல்ஏ அஸ்லாம்பாஷா, திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது, 100-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் அங்கு குவிந்து, ஆம்பூர் தொகுதியில் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட வேண்டும். இல்லையென்றால், கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட மாட்டோம் எனக் கூறினர்.
பின்னர் அங்கிருந்த திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் தேவராஜை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், திமுக தொண்டர்களை மேற்கு மாவட்டச் செயலாளர் தேவராஜ் சமாதானம் செய்தார்.