

தஞ்சாவூர்: பூம்புகார் மாநில விருதுக்கு 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைக் கலைஞர் ஆர்.ராதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் 'பூம்புகார் மாநில விருது' வழங்கி, ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன்படி, 2021-22-ம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்காக 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைக் கலைஞரான தஞ்சாவூர் புதிய குடியிருப்பு வாரியத்தில் வசித்து வரும் ஆர்.ராதா(66) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழக அலுவலகத்தில் ஏப்.13-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் இவ்விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஆர்.ராதா கூறியது: நாங்கள் குடும்பத்துடன் 40 ஆண்டுகளாக தஞ்சாவூர் நெட்டியில் பல்வேறு கைவினைப் பொருட்களை வடிவமைத்து, பூம்புகார் நிறுவனத்துக்கும், பிற இடங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் மரம், ஐம்பொன், நெட்டி உள்ளிட்ட 10 வகையான பொருட்களை வடிவமைக்கும் கைவினைக் கலைஞர்களை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் தேர்வு செய்து, அவர்களுக்கு தாமிர பட்டயம்,ரூ.50 ஆயிரம் காசோலை, அரை பவுன் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வழங்கி, ஊக்கப்படுத்தி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த கைவினைக் கலைஞர் விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். இந்த ஆண்டு தேர்வுக் குழுவால் நான் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, 'கிராமத்தின் தெய்வங்கள்' என்ற தலைப்பில் முனீஸ்வரன், பச்சையம்மன், குதிரை ஆகியவற்றை நெட்டியால் வடிவமைத்து, தேர்வுக் குழுக்கு அனுப்பி வைத்தேன். இதில், என்னுடைய படைப்பு சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டு, பூம்புகார் மாநில விருது பெற நான் தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது.
புவிசார் குறியீடால் பயன்
ஏற்கெனவே எனது மனைவி எழில்விழி 1992-ம் ஆண்டும், எனது மகன் ரவீந்திரநாத் 2014-ம் ஆண்டும் 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைப் பொருட்கள் வடிமைப்பில் சிறந்து விளங்கியதற்காக பூம்புகார் மாநில விருது பெற்றுள்ளனர். 'தஞ்சாவூர் நெட்டி'க்கு புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம், நெட்டியால் வடிவமைக்கப்படும் பொருட்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
அதேபோல, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவில் எங்கு கண்காட்சி நடைபெற்றாலும், அங்கு 'தஞ்சாவூர் நெட்டி' கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய இலவசமாக ஒரு அரங்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதில் நாங்கள் கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம் என தெரிவித்தார்.