Published : 11 Apr 2022 06:16 AM
Last Updated : 11 Apr 2022 06:16 AM

மின்கசிவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் கருவி: வீடுகள், ஆலைகளில் பொருத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

கோவை: மின் இணைப்புகளில் மின்கசிவு ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், மின்கசிவு ஏற்படுத்திய தீ விபத்தால் உயிரிழப்பு மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்படுகிறது. இவ்வாறு மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை ‘ரெசிடுயல் கரண்ட் சர்க்கியூட் பிரேக்கர்’ (ஆர்சிசிபி) எனும் மின்கசிவு தடுப்பான் தடுக்கிறது.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான விதி இருந்தும் பெரும்பாலான மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவி பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த சாதனம் மின் கசிவு ஏற்பட்ட ஒருசில நொடிகளில் மின்துண்டிப்பு செய்துவிடும். இக்கருவி சரியாக வேலை செய்கிறதா என்று சோதனை செய்துகொள்ளும் வசதியும் கருவியிலேயே உள்ளது. அதிகபட்சமாக ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில் ஆயிரத்தில் முப்பது பங்கு மின்சாரம் (30mA) சில வினாடிகள் மனித உடலில் பாய்ந்தால் இறப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

குளியலறை, சமையல் அறை, விவசாய இணைப்புகளில் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வீடுகள், சிறிய வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், விவசாய மின் இணைப்புகளில் ஆர்சிசிபி கருவியை பொருத்த வேண்டும். மின் அதிர்ச்சியைத் தவிர்த்து மனித உயிர்களைக் காக்கும் பொருட்டு அதனுடைய மின் கசிவை உணரும் திறன் 30 மில்லி ஆம்பியருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அதேபோல 10 கிலோ வாட்டுக்கு மேல் மின் சாதனங்களைப் பொருத்தியிருக்கும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், மருத்துவக் கூடங்கள், கிடங்குகள், பெரிய தொழிற்சாலைகள் போன்ற உபயோகத்துக்கான மின் இணைப்புகளில் மின் கசிவினால் ஏற்படும் தீ விபத்தைத் தடுக்கும் பொருட்டும், உடைமைகளைப் பாதுகாக்கும் பொருட்டும், அந்தந்த வளாகங்களில் மின் இணைப்பு மொத்தமாக ஆரம்பிக்கும் இடத்தில் 300 மில்லி ஆம்பியர் அளவுக்கான மின்கசிவை உணரும் திறன் கொண்ட ஆர்சிசிபி கருவியை பொருத்த வேண்டும்.

தேவையின்றி அடிக்கடி இந்த சாதனம் செயல்பட்டு தொந்தரவு கொடுப்பதைத் தடுக்கும் வகையில், மின் பளுவின் அளவு மற்றும் கட்டிடத்தின் தளங்கள் மற்றும் அறைகளின் பாகுபாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றவாறு பிரிக்கப்பட்ட ஒவ்வொரு மின்சுற்றிலும் தனித்தனியாக இந்த கருவியை பொருத்த வேண்டும்.

இதன்மூலம் அந்தந்தக் கட்டிடப் பகுதியில் உள்ளவர்கள், அந்தந்தப் பகுதியில் உண்டாகும் மின்பழுதினால் ஏற்படும் மின் அதிர்ச்சியிலிருந்து காக்கப்படுவார்கள். புதிதாக மின் இணைப்பு கோரும் அனைத்து விண்ணப்பதாரர்களும், இந்த உயிர் காக்கும் சாதனத்தை மின் இணைப்பு கோரும் கட்டிடத்தில் நிறுவுவது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x