

தருமபுரி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஒகேனக்கல் அருவியில் குளிக்க பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால், நீண்ட நாட்களுக்கு பின்னர் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள அருவியில் சுற்றுலாப் பயணிகள்குளித்தும், பரிசல் பயணம் செய்வதும் வழக்கம். அதுவும் கோடை காலத்தில் ஒகேனக்கல் அருவி பயணிகளால் களைகட்டும். கடந்த இரு ஆண்டாக கரோனா கட்டுப்பாடு காரணமாக களையிழந்திருந்த ஒகேனக்கல் கடந்த சில வாரங்களாக பயணிகள் வருகையால் களைகட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று கோடையின் வெப்பம் அதிகம் காரணமாக ஒகேனக்கல்வில் பயணிகளின் வருகை வழக்கத்தைவிட அதிகரித்து இருந்தது. இதனால், அங்குள்ள பிரதான அருவியில் நேற்று குளிக்க இடமின்றி பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்து பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
மேலும், காவிரியில் பரிசல் பயணம் செல்ல படகுத் துறை மற்றும் மணல் திட்டு, ஐந்தருவி, கொட்டும் அருவி உள்ளிட்ட இடங்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு,சிறு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை மழை காரணமாக காவிரியில் நீர்வரத்து சற்று அதிகரித்திருந்த நிலையில் பாதுகாப்பான இடங்களில் ஆற்றில் பயணிகள் நீராடி மகிழ்ந்தனர்.
இதையொட்டி, போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றுப்பகுதி மற்றும் அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பான இடங்களில் பயணிகள் ஆற்றில் குளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோடை வெயில் காரணமாகவும், கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாகவும் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வரும் நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் பயணிகள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரு ஆண்டாக கரோனா கட்டுப்பாடு காரணமாக வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்த பரிசல் ஓட்டிகள் மற்றும் சமையல் கலைஞர்கள், சுற்றுலா சார்ந்த தொழிலாளர்களுக்கு வரும் நாட்களில் பயணிகள் வருகையால் வருவாய் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.