Published : 11 Apr 2022 07:58 AM
Last Updated : 11 Apr 2022 07:58 AM
சென்னை: சென்னையில் ஓட்டல், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான சொத்து வரியை குடியிருப்பு அல்லாத கட்டிடங்களாக கருதி மதிப்பிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான சொத்து வரியை அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி சொத்து உரிமையாளர்களை 600 சதுரஅடி பரப்பளவு வரை, 601 முதல் 1200 சதுரஅடி வரை, 1201 முதல் 1800 சதுரஅடி வரை, 1800 சதுர அடிக்கு மேல் என 4 வகையாக பிரித்து 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் ஆட்சேபனைகளை பெற்று, மாமன்றத்தில் பரிசீலத்து சொத்து வரி உயர்வை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதனிடையே 176 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பிரதான சென்னை மாநகரப் பகுதியில் (விரிவாக்கத்துக்கு முந்தைய சென்னை) உள்ள ஓட்டல்கள் (தங்கும் வசதியுடன் கூடியவை), திருமண மண்டபங்கள் திரையரங்குகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கான வரி மதிப்பிடும் முறையை மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, இதுவரை மேற்கூறிய 4 வகை கட்டிடங்களை சிறப்பு வகை கட்டிடங்களாக கருதி அவை வசூலிக்கும் வாடகை அல்லது கட்டணம் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு செய்து விதிக்கப்பட்டது.
இப்போது குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் சொத்து வரி போல், கட்டிடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப, குடியிருப்பு அல்லாத அடிப்படை தெரு கட்டணத்தில் சொத்து வரி நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டு முதல் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு உள்ளது. இதன் மூலம் இத்துறைகளுக்கு விதிக்கப்படும் சொத்துவரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு கூறும்போது, "ஓட்டல்களில் நிலையான கட்டணம் இருப்பதில்லை. சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது. இந்நிலையில் குறைந்த கட்டணம் அல்லது அதிகபட்ச கட்டணம் இவற்றில் எதன் அடிப்படையில் வரியை மதிப்பிடுவது என்பது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, ஓட்டல் கட்டிடங்களை குடியிருப்பு அல்லாத கட்டிடங்களாக கருதி சொத்து வரி விதிக்குமாறு நீண்ட நாட்களாக கோரி வந்தோம். அதை ஏற்று அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஓட்டல்களுக்கு சாதகமான அறிவிப்புதான்" என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "இந்த வரி விதிப்பு முறை தொடர்புடைய 4 துறையினருக்கும் சாதகமானதுதான். குடியிருப்பு அல்லாத கட்டிடமாக கருதி மதிப்பீடு செய்தால், இப்போது மதிப்பீடு செய்யும் முறையை விட குறைவாகவே சொத்து வரி இருக்கும்" என்றனர்.
மாநகராட்சியின் இந்த முடிவு குறித்து பொதுமக்கள் கூறும்போது, "எங்களைப் போன்ற ஏழை எளிய மக்கள், தங்கும் வசதியுள்ள ஓட்டல்களுக்கு செல்லப்போவதில்லை. ஆனால் திரையரங்கம், மருத்துவமனை, திருமண மண்டபங்கள் ஆகியவை நாங்கள் அடிக்கடி செல்லும் இடங்கள். மாநகராட்சியின் புதிய வரி விதிப்பு விதிகளால் இவற்றுக்கு சலுகை கிடைக்கின்றன. அதற்கு ஏற்றவாறு இந்த 3 துறையினரும் தங்கள் கட்டணங்களை குறைக்க வேண்டும். அதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்" என்றனர்.
புதிய வரி விதிப்பு விதிகளால் கிடைக்கும் சலுகைக்கு ஏற்றவாறு தொடர்புடைய துறையினர் கட்டணங்களை குறைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT