

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீராமநவமியையொட்டி சுவாமி தரிசனம் செய்த தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்ர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், ராமநவமியையொட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ராமநவமி மட்டுமில்லை. வசந்த நவராத்திரியின் நிறைவு நாள் என்பதால், காமாட்சி அம்மனை தரிசித்தேன். அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகள்.
அனைவரும் மகிழ்ச்சியுடனும், உடல் நலத்துடனும் இருக்க வேண்டும். கரோனா தொற்று குறைந்திருந்தாலும், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், தடுப்பூசி போடாத நபர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.