Last Updated : 11 Apr, 2022 08:27 AM

 

Published : 11 Apr 2022 08:27 AM
Last Updated : 11 Apr 2022 08:27 AM

காஞ்சி மாநகராட்சி குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீப்பற்றி எரியும் குப்பை: முறையான பராமரிப்பு இல்லாததால் ரூ.1.33 கோடி அபராதம்

திருக்காலிமேடு குப்பை கிடங்கில் குப்பை தீப்பற்றி எரிந்தது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் குப்பை கிடங்கில் 24 மணி நேரமும் தீப்பற்றி எரியும் குப்பையால், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு, திருக்காலிமேடு உட்பட சுற்றுப்புற கிராம மக்களுக்கு சுவாசப் பிரச்சினைஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், குப்பை பராமரிப்பு பணிகள் முறையாக இல்லை என ரூ.1.33 கோடி அபராதம் விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. நகரப் பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 70 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 20 டன் பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளதாகத் தெரிகிறது. குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு அமைந்துள்ளது.

இங்கு சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் உள்ளிட்டவற்றைத் தரம் பிரித்து பயோமைனிங் தொழில்நுட்பத்தில் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. எனினும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் உள்ளதால், குப்பை கிடங்கில் அதிக அளவில் குப்பை தேங்கியுள்ளன. மேலும், அடிக்கடி மர்மமான முறையில் குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிவதால், கடும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை வெளியேறி அருகில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது.

இதனால், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு குடியிருப்பு வாசிகள் சுவாசப் பிரச்சினை உட்பட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக இந்த குப்பை கிடங்கில்24 மணி நேரமும் குப்பை தீப்பற்றி எரிந்து வருவதால், 3 கி.மீ. தொலைவில் உள்ள ரயில்வே சாலை வரையில் புகை பரவி வருகிறது. அதனால்,குப்பை கிடங்கில் தீயை முழுவதுமாக அணைத்து மீண்டும் தீப்பற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுப்புற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, காஞ்சி மாநகராட்சியின் 28-வது வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன் கூறியதாவது: கடந்த மார்ச் மாதம், தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டக் குழு கண்காணிப்பு அலுவலர் நீதியரசர் ஜோதிமணி மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாமன்றஉறுப்பினர்கள், மேயர் உள்ளிட்டோரை அழைத்துச் செல்லவில்லை. அவருடன் அதிகாரிகள் மட்டுமேசென்றனர். பின்னர், நீதியரசர் கவுன்சிலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், திருக்காலிமேடு குப்பை கிடங்கு பிரச்சினை குறித்து பேசினேன். மேலும், அதிகாரிகள் முறையான தகவல்களை வழங்கியிருக்க மாட்டார்கள். சுற்றுச்சூழல்மாசால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது எங்களுக்குத்தான் தெரியும் என கூட்டத்தில் நீதியரசரிடம் தெரிவித்தேன். ஆனாலும் இந்நிலை தொடர்கிறது என்றார்.

இதுகுறித்து, காஞ்சி மாநகராட்சி பணியாளர்கள் கூறியதாவது: குப்பைகிடங்கில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. எனினும், கோடைக்காலம் என்பதால் தேங்கியுள்ள குப்பையின் அடியில் எப்படியோ தீப்பற்றுகிறது. குப்பை கிடங்கில் தீயை அணைக்க அடிக்கடி தீயணைப்பு வாகனம் வருவதில்லை. அதனால், மாநகராட்சியின் தண்ணீர் லாரிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இதுகுறித்து, சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: திருக்காலிமேடு குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் முறையாக இல்லாததால் ரூ.95 லட்சம் மற்றும் திரவக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.38 லட்சம் என காஞ்சி மாநகராட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x