Published : 10 Apr 2022 04:48 AM
Last Updated : 10 Apr 2022 04:48 AM

ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் கண்டிப்பாகப் பொருத்தப்பட வேண்டும். மேலும், பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் அந்த மீட்டரை ஆட்டோ ஓட்டுநர்கள் முறையாக இயக்குவதில்லை என்றும், தங்களது இஷ்டம்போல கட்டணம் வசூலிக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டி வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும், ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் பொருத்தி, அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டுமென கடந்த 2013-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘கடந்த 2013-ம்ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மீட்டருடன் சேர்த்து பிரின்ட்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அது பொருத்தப்படவில்லை. ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரரான வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி, ‘‘ஆட்டோக்களில் உள்ள மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளன. ஆட்டோ டிரைவர்கள் மீட்டர்களை இயக்குவதில்லை என்பதே எனது குற்றச்சாட்டு. எனவே தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் மீட்டர்படி கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டார்.

சோதனை செய்ய வேண்டும்

அதையடுத்து நீதிபதிகள், ‘‘ஆட்டோக்களில் எலெக்ட்ரானிக் மீட்டரை கண்டிப்பாகப் பொருத்தி அதன்படியே கட்டணம் வசூலிக்க வேண்டும். மீட்டர்களை முறையாக இயக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போலீஸாரும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல பெட்ரோல், டீசல் விலை மாறுதலுக்கேற்ப ஆட்டோ ஓட்டுநர்களும், பொதுமக்களும் பரஸ்பரம் பலன் அடையும் வகையில் ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். இதற்காக நீண்ட நெடிய நடவடிக்கையை எடுக்காமல் பெட்ரோல், டீசல் விலைமாற்றத்துக்கேற்ப ஆட்டோ கட்டணமும் தானாக மாறும் வகையி்ல் மீட்டர்களில் புதிய மென்பொருளை பயன்படுத்தலாம்’’ என அரசுக்கு யோசனை தெரிவித்து வழக்கை முடித்துவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x