Published : 27 Apr 2016 04:38 PM
Last Updated : 27 Apr 2016 04:38 PM

பிற மாவட்டங்களிலும் செல்வராஜ் பிரச்சாரம்: அதிமுக தலைமை அதிரடி நடவடிக்கை

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ், திருச்சியில் மட்டுமின்றி முத்தரையர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பிற மாவட்டங்களிலும் பிரச்சார பயணம் மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ். திமுகவில் இருந்து வெளியேறிய இவர், கடந்த 23-ம் தேதி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன்பின் திருச்சி வந்த இவர், அதிமுகவினருடன் இணைந்து மேற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் இருந்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜுக்கு அவசர அழைப்பு வந்தது. இதையடுத்து அவர் நேற்றுகாலை சென்னை சென்றார். இந்த அவசர அழைப்புக்கான காரணம் குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

கட்சியில் சேர்ந்தவுடன் திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட செல்வராஜ் முடிவு செய்து, அதற்கான பணிகளையும் தொடங்கினார். இந்நிலையில் திருச்சியில் மட்டுமின்றி தமிழகத்தில் முத்தரையர் சமுதாய மக்கள் கணிசமாக வசிக்கக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் பிரச்சார பயணம் மேற்கொள்ளுமாறு செல்வராஜுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி புதுக்கோட்டை, மதுரை, நெல்லை, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் செல்வராஜ் பிரச்சாரம் செய்ய உள்ளார். இவரது சுற்றுப்பயணம் குறித்த விவரங்கள் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 29-ம் தேதி முதல் செல்வராஜ் தீவிர பிரச்சாரப் பயணத்தை தொடங்குகிறார் என்றனர்.

ஜாதியைச் சொல்லித் திட்டியதாகக் கூறி சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக முத்தரையர் சமுதாயத்தினர் சில மாதங்களுக்கு முன் போராட்டங்களை நடத்தினர். அதிமுகவுக்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டியிருந்தனர். இந்நிலையில், முத்தரையர் இன மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான செல்வராஜ் மேற்கொள்ளும் பிரச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கும் என அதிமுகவினர் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x