

தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் விழுப்புரம் கல்லூரி மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.
ராஜஸ்தான் மாநிலம், குஷால்பல்கலைக்கழகத்தில் கடந்த 3-ம்தேதி முதல் 6 ம் தேதி வரைதேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பல்கலைக்கழகங்கள் உட்பட 51 பல்கலைக்கழகங்கள் பங்கு பெற்றன.
திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இளங்கலை பொருளாதாரம் பயிலும் ஹேமச்சந்திரன் மல்லர் கம்பம் தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
நேற்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கிய மாணவர் ஹேமச்சந்திரனுக்கு தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகம், விழுப்புரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் மற்றும் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் சார்பாக மேள தாளங்களுடன் மாலை மாற்றும் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
தங்கப் பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.