Published : 01 Apr 2016 08:38 AM
Last Updated : 01 Apr 2016 08:38 AM

காங்கிரஸுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி: கருணாநிதியுடன் ஸ்டாலின் ஆலோசனை

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியுடன் அக்கட்சி யின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சுமார் 2 மணி நேரம் ஆலோ சனை நடத்தினார்.

கடந்த 25-ம் தேதி சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேசினார். கடந்த 2011 தேர்தலில் போட்டியிட்ட 63 தொகுதிகளையும் ஆசாத் கேட்க, 25 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என கருணாநிதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் எந்த முடிவும் ஏற்படவில்லை. அதுபோல கடந்த 28-ம் தேதி எஸ்டிபிஐ கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே, தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக தரப்பில் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின.

தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் இதுதொடர்பாக மேலிடத் தலைவர்களை சந்திப்பதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங் கோவன் கடந்த 29-ம் தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோரை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், சுமார் 2 மணி நேரம் கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தினார். தேமுதிகவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் இருப்பது அவசியம் என்பதை திமுகவின் தென் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி யுள்ளனர். தமாகாவை கூட்டணியில் சேர்க்க ராகுல் காந்தி எதிர்ப்பது தொடர்பாகவும், காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்கலாம் என்பது தொடர்பாகவும் இருவரும் ஆலோசித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 24-ம் தேதி தனது தந்தை கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கருணாநிதி விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் திமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை வெளியீடு, தேர்தல் பிரச் சாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் இருவரும் விவாதித் ததாக திமுகவினர் தெரிவித்தனர்.

தமாகாவுடன் பேசவில்லை: ஸ்டாலின் மறுப்பு

கருணாநிதியை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘தமாகாவுடன் பேச்சு நடப்பதாக நாங்கள் யாரும் சொல்லவில்லை. நீங்களாகவே கற்பனை செய்து எழுதுகிறீர்கள். உங்களின் கற்பனைக்கு நான் உடந்தையாக இருக்க முடியாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x