

தி.மலை மாவட்டம் குப்பநத்தம் அணையில் இருந்து ஏரி பாசனத்துக்காக விநாடிக்கு 265 கனஅடி தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டியிருந்தது. காலை நிலவரப்படி 59.04 அடியாகவும் மற்றும் 700 மில்லியன் கனஅடி தண்ணீரும் உள்ளது. குடிநீர், அணை பராமரிப்பு மற்றும் நீர் ஆவியாதல் மூலம் ஏற்படும் இழப்பு என 106.92 மில்லியன் கனஅடி தண்ணீர் போக, பாசன வசதிக்காக மீதமுள்ள 593.08 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இதையடுத்து, பாசனத் துக்காக தண்ணீரை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, குப்பநத்தம் அணை யில் இருந்து ஏரி பாசனத்துக்காக தண்ணீரை பொதுப்பணித் துறைஅமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்துவைத்தார். 40 கிராமங்களில் உள்ள 47 ஏரிகளை நிரப்பும் வகையில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை என மொத்தம் 18 நாட்களுக்கு, விநாடிக்கு 265 கனஅடி தண்ணீர் என 412.20 மில்லியன் கனஅடி திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 28-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரை என 8 நாட்களுக்கு விநாடிக்கு 240 கனஅடி தண்ணீர் என 165.92 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளன. 26 நாட்களுக்கு 578.12 மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பதன் மூலம், 40 கிராமங்களில் உள்ள 9,432 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, “விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி குப்பநத்தம் அணையை, அப்போது துணை முதல்வராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர், 40 கிராமங்களில் உள்ள 47 ஏரிகளில் நிரம்பும். 9,432 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். ஏரிகள் நிரம்பியதும், பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சலை விவசாயிகள் பெற்றிட வேண்டும்” என்றார்.
இதில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், தி.மலை மத்திய பெண்ணையாறு வடிநில கோட்ட பொறியாளர் சாம்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.