சேலம் கோயில் விழாவில் நடனமாட வற்புறுத்திய ரசிகர்கள்: கடுப்பான நடிகை ஆண்ட்ரியா

சேலம் கோயில் விழாவில் நடனமாட வற்புறுத்திய ரசிகர்கள்: கடுப்பான நடிகை ஆண்ட்ரியா
Updated on
1 min read

சேலம்: சேலத்தில் நடந்த கோயில் விழாவில் கலந்துகொள்ள வந்த நடிகையும், பிரபல பாடகியுமான ஆண்ட்ரியாவை நடனமாட வற்புறுத்திய ரசிகர்களால் கடுப்பானவரை, கோயில் விழா கமிட்டியினர் சமாதானம் செய்து பாட வைத்தனர்.

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி மாரியம்மன் கோயில் விழாவில் நடந்த திரை இசை கலை நிகழ்ச்சியில், தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டார். சமீபத்தில் வெளிவந்த ‘புஷ்பா’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா பாடிய ‘ஊ சொல்லுறியா’ என்ற பாடல் பிரபலமடைந்துள்ள நிலையில், அவரது வருகை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் கோயில் விழாவுக்கு வந்தவர்களின் கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் கூடினர். வெகுநேரம் திரை இசை கலை நிகழ்ச்சி மேடை அருகே ரசிகர்கள் வெகு நேரம் காத்திருந்த நிலையில், ஆண்ட்ரியா மேடை ஏறினார். ஆண்டிரியாவை காண வந்த ரசிகர்கள் கூட்டம், அவரின் காரை சூழ்ந்ததை அடுத்து, காரை விட்டு இறங்க முடியாமல் தவித்த ஆண்ட்ரியாவை போலீஸார் பாதுகாப்பு வளையம் அமைத்து மேடை ஏற்றினர்.

மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து வரவேற்றனர். அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ‘ஊ சொல்றியா...’ பாடலை ஆண்ட்ரியா பாடவும் ரசிகர்கள் ஆரவாரம் பொங்கிட ஆர்ப்பரித்தனர். மீண்டும் ‘ஒன்ஸ் மோர்’ கேட்டு அப்பாடலை பாடவும், அவர் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தினர். இதனால், கடுப்பான ஆண்ட்ரியா மேடையில் செய்வதறியாமல் நின்றார். விழா ஏற்பாட்டாளர்களும், சக கலைஞர்களும் ஆண்ட்ரியாவை சமாதானம் செய்ததால், மீண்டும் ஒரு முறை அப்பாடலைப் பாடினர். பாடி முடித்த நிலையில் ஆண்டரியாவை ரசிகர்கள் சூழ முயற்சிக்கவும், போலீஸார் அவரை பாதுகாப்புடன் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in