20 வயது இளம்பெண்ணுக்கு 45 வயது முகத் தோற்றம்: சிகிச்சையளித்து சரிசெய்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

சிகிச்சைக்கு முன் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய பெண்ணின் தோற்றம்
சிகிச்சைக்கு முன் மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய பெண்ணின் தோற்றம்
Updated on
1 min read

கோவை: 45 வயது பெண்ணுக்கான முகத்தோற்றம் கொண்ட 20 வயது இளம்பெண்ணுக்கு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்து முகத்தை சரி செய்துள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன் 20 வயது பெண் ஒருவர், தனது முகம் 45 வயதுபோல் தோற்றம் அளிப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்துவிட்டதாகவும் கோவை அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு 'பேரி ரோம்பெர்க் சின்ட்ரோம்' என்ற அரிய வகை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.இதுதொடர்பாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, "இது ஒரு அரிதான தன்னெதிர்ப்பு நோயாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும், தோலில் சுருக்கங்களுடனும் கொழுப்பு திசு அறவே நீங்கியும், வயதான தோற்றம் கொண்டும் இருப்பார்கள்.

சில நேரங்களில் புருவத்தில் முடியில்லாமல்கூட இருப்பார்கள். சிகிச்சைக்கு வந்த பெண் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். அவரை பரிசோதித்த ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

உடலில் இடுப்பு பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்துவதே கொழுப்பை செலுத்தும் சிகிச்சை ஆகும். பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாக பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையே முடி மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் மருத்துவர்கள்ரமணன்‌, செந்தில்குமார், பிரகாஷ், கவிதா பிரியா, சிவக்குமார் ஆகியோர் அடங்கிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை குழு வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின் தற்போது புதுமையான தோற்றப் பொலிவோடு அந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார். புதுமையான இந்த அறுவை சிகிச்சையை செய்த மருத்துவர்களின் பணி பாராட்டுக்குரியது"என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in