ஆலங்குடி, திட்டைகோயில்களில் ஏப்.14-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயில்களில் ஏப்.14-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில் விளங்குகிறது.
இந்நிலையில், ஏப்.14-ம் தேதிகுரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, இக்கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, குரு பகவானுக்கு கடந்த 6-ம் தேதிதொடங்கிய முதல்கட்ட லட்சார்ச்சனை நாளை (ஏப்.10) வரை நடைபெறுகிறது.
தொடர்ந்து, குருப் பெயர்ச்சிக்குப் பின்னர் ஏப்.18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 2-வதுகட்டமாக லட்சார்ச்சனை நடைபெறும். இந்த லட்சார்ச்சனையில் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்கள் கலந்துகொண்டு பரிகாரம் செய்துகொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திட்டை கோயிலில்...
இதேபோல, குரு பரிகாரத் தலமான தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. இங்கு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, ஏப்.14-ம் தேதி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
ஏப்.24-ம் தேதி லட்சார்ச்சனையும், ஏப்.29, 30-ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் நடைபெறுகிறது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள், அதற்கான தொகையை கோயில் நிர்வாகத்திடம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதற்கான பிரசாதம் தபால் மூலம் மட்டுமே அனுப்பி வைக்கப்படும் என கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி தெரிவித்தார்.
