

கரூர்: பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்திய பரதநாட்டிய கலைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் எஸ்.பி-யிடம் அரசு இசைப் பள்ளி ஆசிரியை நேற்று புகார் அளித்தார்.
கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளிக்கு கடந்த பிப்.28-ம் தேதி ஆய்வுக்காக வந்த கலையியல் அறிவுரைஞரும், பரதநாட்டிய கலைஞருமான ஜாகிர் உசேன், தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கலை பண்பாட்டுத் துறை இயக்குநரிடம் அங்கு பணியாற்றும் பரதநாட்டிய ஆசிரியை அண்மையில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக, கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் ஏப்.4-ம் தேதி ஆசிரியையிடம் விசாரணை நடத்தி, ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் விசாகா கமிட்டி விசாரணை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படியும், தனது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில்,சென்னையில் ஏப்.6-ம் தேதி நடைபெற்ற விசாகா கமிட்டி விசாரணைக்கு ஆஜரான இசைப் பள்ளி ஆசிரியை, பின்னர் கரூர் திரும்பினார். தொடர்ந்து, எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று வந்த இசைப் பள்ளி ஆசிரியை, எஸ்பி ப.சுந்தரவடிவேலுவிடம் புகார் மனு அளித்தார். அதில், பாலியல் தொல்லைக்கு ஆளான தனது அடையாளத்தை சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ள பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.