திருப்பூர் | பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் எழும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

திருப்பூர் | பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் எழும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் பெண் தொழிலாளர்கள் பணி செய்யும் இடங்களில் எழும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் ஆணையத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீதான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சு.வினீத் முன்னிலை வகித்தார்.

இதில் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமரி பேசியதாவது: மகளிர் ஆணையத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்கான அனைத்து உதவிகளும் செய்யப்படுகின்றன. பெண்களுக்கென பல்வேறு உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பாக புகார் அளிக்கும் உதவி எண்ணான 1098 குறித்து பள்ளிகளின் மூலம் அனைத்து குழந்தைகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

திருப்பூர் மாவட்டத்தில் பெண்களுக்கான மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

பெண்கள் பணி செய்யும் இடங்களில் புகார் பெட்டிகள் வைத்திருப்பதை, தொழிலாளர் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதேபோல் அங்கு அளிக்கப்படும் புகார்களை தொடர்புடைய நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளே எடுக்கும் வகையில் இருந்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்காது. இவற்றையெல்லாம் தொழிலாளர் துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பெண்களுக்கான உதவி மையங்கள் உள்ளதை அனைத்து பெண்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நூற்பாலை போன்ற தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கான புகார் பெட்டிகளை, பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண் தொழிலாளர் விடுதிக்கு உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்,’’ என்றார்.

கூட்டத்தை தொடர்ந்து, பெண்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா, மாநகர காவல் துணை ஆணையர் ரவி, சமூக நல அலுவலர் அம்பிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in