Published : 09 Apr 2022 05:27 AM
Last Updated : 09 Apr 2022 05:27 AM

‘ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும்’ - அமித் ஷா பேச்சுக்கு ஸ்டாலின், தலைவர்கள் எதிர்ப்பு

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டுவரக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக காங்.தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. ‘இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா. மத்திய மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது. ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது. ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: நாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை அலுவல் மொழியாக ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை இந்தி மொழி அடிப்படையில்தான் ஏற்படுத்த முடியும். மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டு வருகின்றன” என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பாஜக இந்தியை திணிப்பதில் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடும் அணுகுமுறையைக் கையாண்ட பாஜகவினர் தற்போது இந்தி மொழி திணிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதி செய்யும் வகையில் அமித்ஷாவின் பேச்சு அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயலாகும். உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை என்பது இந்திய அரசமைப்பு, ஆட்சி மொழிகள் சட்டத்துக்கும் விரோதமானதாகும். அமித்ஷா கூற்றின்படி ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி திணிக்கப்படுமேயானால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு பாஜகவின் இந்தி திணிப்புக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்திதான் இருக்க வேண்டும். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதன் பொருள் மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான். இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல்ஆகும். அதை ஏற்றுத்தான் ஆங்கிலம் இணைப்பு மொழியாகத் தொடர நேரு அனுமதித்தார் என்பதுவரலாறு.

இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குத்தான் உண்டு.

ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்துக்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம். இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x