Published : 09 Apr 2022 06:00 AM
Last Updated : 09 Apr 2022 06:00 AM
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே கொரல்நத்தம் அரசுப் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அடுத்த கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 342 மாணவர்கள் படிக்கின்றனர். இவற்றில் 256 மாணவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது ரம்ஜான் மாதத்தையொட்டி மாணவர்களில் பெரும்பாலானோர் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.
நேற்று காலை பள்ளி முன்பு, 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன், குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் அன்புமணி ஆகியோர் கொரல்நத்தம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கொரல்நத்தம் பள்ளிக்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடியிடம் மாணவர்களின் பெற்றோர்கள் கணித ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தங்கள் மதத்தை தவறாக பேசியதாக குற்றம் சாட்டினர். இதுகுறித்து பொன்முடி அளித்த அறிக்கையின்படி சிஇஓ., மகேஸ்வரி கணித ஆசிரியர் சங்கரை அஞ்செட்டி அடுத்த கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு உயர் நிலைப்பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT