அதிமுகவுக்கு ஆதரவா, இல்லையா?- ஜான்பாண்டியன் நாளை ஆலோசனை

அதிமுகவுக்கு ஆதரவா, இல்லையா?- ஜான்பாண்டியன் நாளை ஆலோசனை
Updated on
1 min read

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சீட் எதுவும் ஒதுக்காததால் அக்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாளை (7-ம் தேதி) சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நடத்துகிறார். இதில் முக்கிய முடிவை அறிவிக்கிறார்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக அதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டுவருகிறது. கடந்த சட்டப் பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு அக்கட்சி ஆதரவு அளித்திருந்தது. இந்நிலையில் வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்குமுன் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் சந்தித்து தங்களது கட்சி ஆதரவை ஜான்பாண்டியனும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தெரிவித்திருந்தனர். இதனால், இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என்று கட்சியினர் நம்பியிருந்தனர்.

ஆனால் நேற்று முன்தினம் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கட்சி தலைமையிடம் மாவட்ட நிர்வாகிகள் பலரும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து நாளை (7-ம் தேதி) சென்னையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு ஜான்பாண்டியன் ஏற்பாடுகளை செய்துள்ளார். தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதா, அல்லது தனித்து செயல்படுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கட்சியின் திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் கூறியதாவது: முதல்வரை சந்தித்தபோது, வாசுதேவநல்லூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிமுக குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கடைசியில் வாசுதேவநல்லூர் தொகுதியை மட்டும் ஒதுக்குவதாக அதிமுக குழுவினர் தெரிவித்தனர். ஒரு தொகுதி என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. கடைசியில் எங்களுக்கு சீட் எதுவும் ஒதுக்காமலே அதிமுக தலைமை 227 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இதனால்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க சென்னையில் கூட்டம் நடக்கிறது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in