

சென்னை: முழங்காலின் மேல்பகுதி வரை இழந்தவர்கள், எளிதாக நடக்கும் வகையில் 'கதம்' என்ற பன்மைய செயற்கை முழங்காலை சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
இதன் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் இணையவழியில் கலந்துகொண்டார்.
ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மைய ஆசிரியத் தலைவர் சுஜாதா னிவாசன்உள்ளிட்டோர் முன்னிலையில், செயற்கை முழங்கால் அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது: ஒருவரின் உலகத்தை மற்றவர்களுடன் இணைப்பது தொழில்நுட்பம்தான்.
அனைத்து தரப்பு மக்களிடமும் தொழில்நுட்பம் திருப்பத்தை ஏற்படுத்துகிறது. 'கதம்' அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதில், பேருந்துகள், ஆட்டோக்களில் எளிதாக அமர்ந்து செல்லவும், நடக்கும்போது செயற்கை முழங்காலை 160 டிகிரி மடக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகேடி பேசும்போது, "சுகாதாரம், மருத்துவத்தை தொழில்நுட்ப ரீதியாக சந்திக்க வேண்டியது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு அவசியம். இந்த தேவையை நியாயப்படுத்தும் உதாரணமாக கதம் பன்மைய செயற்கை முழங்கால் அமைந்துள்ளது" என்றார்
மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத் தலைவர் பேராசிரியர் சுஜாதா னிவாசன் பேசும்போது, “இறக்குமதி செய்யப்பட்ட முழங்கால்களைவிட, 4 அல்லது 5 மடங்கு மலிவு விலையில், சர்வதேச தரத்துடன் கதம் கிடைக்கும். பல்வேறு புவியியல் அமைப்புகளில், விரிவான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
பேருந்துகள், ஆட்டோக்களில் எளிதாக அமர்ந்து செல்லவும், நடக்கும்போது செயற்கை முழங்காலை 160 டிகிரி மடக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.