

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே செல்ஃபி எடுக்கும்போது ரயிலில் அடிபட்டு மூன்று இளைஞர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கை, சிங்கப் பெருமாள்கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன்(17) ஆகிய 3 இளைஞர்கள் ரயில் இரும்புப் பாதையில் அமர்ந்து செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவு செய்து வந்தனர்.
இவர்கள் நேற்று முன்தினம் மாலை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மூன்றாவதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே இரும்புப்பாதையில் அமர்ந்து வீடியோக்களை பதிவு செய்தனர். அப்போது சென்னை தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கிச் செல்லக் கூடிய விரைவு ரயில் வந்தபோது ரயில் பாதையில் நின்று செல்போனில் வீடியோக்களை பதிவு செய்ததாகத் தெரிகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது ரயில் மோதியதில் அசோக்குமார், பிரகாஷ், மோகன் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே இரும்புப் பாதை போலீஸார் 3 பேரின் உடலைமீட்டு உடற்கூறு ஆய்வுக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 இளைஞர்கள் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.