குணசேகரன்.
குணசேகரன்.

சின்னசேலம் ஆணையப்பா உணவகத்தில் சாம்பார், ரசம், மோருடன் ரூ.5-க்கு மதிய சாப்பாடு

Published on

கள்ளக்குறிச்சி: நாள் தோறும் எரிபொருள் விலை உயர்வால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் கடந்த 6 மாதங்களாக ரூ.5 -க்கு மதிய சாப்பாடு வழங்கி வருகின்றனர்.

ஆணையப்பா உணவகத்தில் பிற்பகல் 12 மணி ஆனவுடன் கூட்டம்அலை மோதுகிறது. ஆணையப்பாஉணவக உரிமையாளர் குணசேகர னிடம் இதுபற்றி விசாரித்த போது, “பல வருடங்களாக மளிகைக் கடை நடத்தி வந்த நிலையில், எனது தாயார் கடந்தாண்டு உயிரி ழந்தார். அவர் இறந்தபோது, அவர்அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றி விட்டு தான்அடக்கம் செய்தோம். அவர் எதையும் எடுத்துச் செல்லவில்லை. பசியோடு வருபவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று என் தாயார் அடிக்கடி கூறுவார். அவர் இறந்த போதுஇந்த உலகத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை உணர்ந்தேன். அதையடுத்து தான் அவரது நினைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் ரூ.5-க்கும் சாப்பாடு வழங்கி வருகிறேன்.

நான் உண்ணும் பொன்னி வகை அரிசியில் சமைத்து 300 கிராம் எடையுள்ள சாப்பாடுடன் சாம்பார், ரசம், மோர் மற்றும் ஊறுகாய் அளிக்கிறேன். கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள், அரசுப் பள்ளி மாணவர்கள் என நாளொன்றுக்கு 300 பேர் வரை உணவு அருந்திச் செல்கின்றனர். அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் முக மலர்ச்சி அடைவதை பார்க்கும் போது எனக்கு திருப்தி ஏற்படுகிறது.

என்னுடைய பிரதான தொழில் மளிகைக் கடை. எனது கடையில் 11 பேர் பணிபுரிகின்றனர். என் குடும்பத்தினர் மற்றும் கடை ஊழியர்கள் துணையுடன் மதிய உணவு மட்டும் தயாரித்து வழங்கி வருகிறேன். இதனால் நான் மட்டுமல்ல, என் குடும்பத்தாரும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in