

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் மோதும் வாய்ப்புள்ளதால் தென்மாவட்டங்களிலேயே கடும் போட்டியைச் சந்திக்க உள்ள தொகுதியாக ஆத்தூர் மாறி உள்ளது.
ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் நத்தம் ஆர். விசுவநாதன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நத்தம் தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முறையும் நத்தம் தொகுதியில் போட்டியிடுவோம் என்ற அதீத நம்பிக்கையில் இருந்தார். அதிமுகவில் அதிகாரபீடமாக நால்வர் அணியில் வலம் வந்த இவருக்கு, சமீபத்தில் கட்சியில் இறங்குமுகமாக இருந்தது. நால்வர் அணியில் இருந்தும் அவர் கழற்றி விடப்பட்டார். இதைத்தொடர்ந்து, நத்தம் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம் அல்லது திமுக முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆத்தூர் தொகுதியில் நத்தம் ஆர். விசுவநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதி நடப்பு எம்எல்ஏ இ.பெரியசாமி, இரண்டுமுறை இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். தற்போது மீண்டும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். கிராமப்புறங்களில் சுவர் விளம்பரமும் செய்துவிட்டார். தற்போது பிற கட்சித் தொண்டர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 2ஜி முறைகேடு, குடும்ப அரசியல் போன்றவற்றால் கடந்தமுறை தமிழகத்தில் திமுக மீது கடும் அதிருப்தி இருந்தபோதே, ஆத்தூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இ.பெரியசாமி வெற்றிபெற்றார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஆத்தூரில் மட்டும் திமுக வேட்பாளர் பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார். தற்போது தென் மாவட்டத்திலேயே கடும் போட்டியை சந்திக்கும் தொகுதியாக ஆத்தூர் மாறியுள்ளது.