'இணைப்பு மொழி... பிரிக்கத்தான் பயன்படும்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

அமித் ஷா (இடது) , கனிமொழி (வலது) | கோப்புப் படங்கள்
அமித் ஷா (இடது) , கனிமொழி (வலது) | கோப்புப் படங்கள்
Updated on
1 min read

சென்னை: 'இணைப்பு மொழி என்பது நாட்டை இணைக்கப் பயன்படாது; அது பிரிக்கத்தான் பயன்படும் என்று மத்திய அமைச்சர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்' என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அதில் அவர் பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்; உள்ளூர் மொழிகளை அல்ல.

இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும். அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில்தான் தயாராகும். வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அமித் ஷாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து #stophindiimposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்த நிலையில், அவருக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவுச் செய்தி வருகின்றனர்.அந்த வகையில், திமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் பக்கத்தில், “இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது; அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in