கடலூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய விருது

கடலூர் அரசு மருத்துவமனைக்கு தேசிய விருது
Updated on
1 min read

கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பான முறையில் காயகல்ப சிகிச்சை மேற்கொள்வதைப் பாராட்டும் வகையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுப்புராயலு ரெட்டியார் முயற்சியால் 1907-ம் ஆண்டு இரு செவிலியர்களுடன் நகராட்சி மருந்தகமாக தொடங்கப்பட்டது கடலூர் அரசு தலைமை மருத்துவமனை. 100 ஆண்டுகளைக் கடந்து தற்போது 200 மருத்துவர்கள் உட்பட சுமார் 550 மருத்துவ ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 558 படுக்கைகளுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் தினந்தோறும் 3,869 புறநோயாளிகளுக்கும், 547 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாதம் 450 முதல் 550 மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மருத்துவமனைக்குக் கடந்த ஆண்டு ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காயல்கல்ப சிகிச்சை எனப்படும் மனித ஆயுளை நீட்டித்து பேணிக் காக்கும் வகையில், சுத்தம், சுகாதாரம் மற்றும் தொற்று நோய் தவிர்த்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மாநில அளவில் சிறந்து விளங்கியதற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை செயலர் பி.பி.ஷர்மா விருது வழங்கினார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவர் சண்முகக்கனி பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக மருத்துவர் சண்முகக்கனி கூறும் போது, “கடலூர் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிக்கு இணையாக செயல்படுகிறது அனைத்துப் பிரிவுகளிலும் நவீன உபகரணங்களை கையாண்டு வருகிறோம். ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றிருப்பதோடு, அதைத் தொடர்ந்து பேணிக்காக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தை சுகாதாரமான முறையில் பாராமரித்து வருகிறோம். அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகிறது” என்றார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹபிஸா உடனிருந்தார்.

காயகல்ப சிகிச்சைக்கான தேசிய விருதை மத்திய சுகாதாரத்துறை செயலர் பி.பி.ஷர்மா வழங்க, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிலைய மருத்துவர் சண்முகக்கனி பெற்றுக்கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in