Published : 08 Apr 2022 05:42 PM
Last Updated : 08 Apr 2022 05:42 PM

7.5% இடஒதுக்கீடு பின்புலம் | 'தினமும் 15 மணி நேரம் உழைத்தேன்' - ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் சிறப்புப் பேட்டி

ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் | கோப்புப் படம்

சென்னை: 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக அறிக்கை தயார் செய்ய, கரோனா தொற்று பாதிப்பு உச்சதில் இருந்தபோதும் தினசரி 15 மணி உழைத்ததாக ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் இந்த இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பொன்.கலையரசன் அளித்த அறிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தது உயர் நீதிமன்றம்.

அந்த உத்தரவில், 'ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்தச் சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வரும் முன்பாக அரசுப் பள்ளிகளில் படித்த வெறும் 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், இந்தச் சட்டம் வந்த பிறகு 435 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் இந்தச் சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது.

சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களும் பல்வேறு தடைகளைத் தாண்டி மருத்துவர்களாக வலம் வர ஏதுவாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது அல்ல. நீதிபதி பொன்.கலையரசன் ஆணைய அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பச் சூழல், பொருளாதாரம், கட்டமைப்பு வசதி என அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பி்த்துள்ளது' என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: இந்நிலையில், ’இந்த உத்தரவு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி’ என்று நீதிபதி பொன்.கலையரசன் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்து 'இந்து தமிழ் திசை' டிஜிட்டலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், "இந்த உத்தரவு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து தரவுகளையும் ஆராய்ந்துதான் இந்த அறிக்கையை தயார் செய்தேன். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குழந்தைகள்தான் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர். கல்வித் தரம், நீட் பயிற்சி என்று அனைத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அனைத்தையும் ஆய்வு செய்துதான் இந்த அறிக்கையை தயார் செய்தேன்.
தற்போது இடஒதுக்கீட்டுக்கு எதிராக பல்வேறு நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இந்த உத்தரவு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி.

15 மணி நேரம் உழைத்தேன்

நான் அறிக்கை தயார் செய்யத் தொடங்கும்போது கொரோனா உச்சத்தில் இருந்தது. அந்த நிலையிலும் தினமும் 15 மணி நேரம் உழைத்தேன். கல்வித் துறை அதிகாரிகள் மிகவும் துணையாக இருந்தார்கள். ஒரு தகவலை கேட்டால் மறுநாளே அது தொடர்பான அனைத்து தகவலையும் என்னிடம் கொடுத்துவிடுவார்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மருத்துவரானால், கிராமப்புறங்களில் நல்ல சுகாதார வசதி கிடைக்கும். இந்த மாணவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையிங்களில் பணிபுரிவார்கள். இதனால் தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பு மேலும் வலுவடையும்" என்று நம்பிக்கையுடன் அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x