Published : 08 Apr 2022 12:53 PM
Last Updated : 08 Apr 2022 12:53 PM

சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலமாக அறிவிக்கக் கோரிய வழக்கு: ஹஜ் கமிட்டிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

சென்னை: புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக சென்னை, கொச்சி, ஹைதராபாத் உள்பட 21 இடங்கள் புறப்பாட்டு தலங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 21 புறப்பாட்டு தலன்களை 10 ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்துள்ளது. இதில் சென்னை நீக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையை மீண்டும் புறப்பாட்டு தலங்கள் பட்டியலில் சேர்க்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாப்புலர் பிஃரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்வோர் கொச்சிக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இது புனித பயணம் மேற்கொள்வோருக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 34 ஆண்டுகளாக சென்னை விமான நிலையம் ஹஜ் பயணிகளின் புறப்பாட்டு தலமாக இருந்து வந்தது. 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பயணிகள் சென்னையில் இருந்து புனித பயணம் மேற்கொண்டதாக வாதிடப்பட்டது.

அப்போது ஹஜ் கமிட்டி தரப்பில், சென்னை விமான நிலையத்தையும் புறப்பாட்டு தலமாக அறிவிக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஹஜ் கமிட்டி பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து விரைந்து முடிவெடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x