Published : 08 Apr 2022 11:34 AM
Last Updated : 08 Apr 2022 11:34 AM

10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்தே வாதிட்டது: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி உள்ளிட்டோரை நியமித்து நல்லபடியாக வாதிட்டது. இந்த சட்டப் பிரச்சினையை நல்ல முறையில்தான் தமிழக அரசு கையாண்டு இருக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (ஏப்.8) சந்தித்தனர்.

பின்னர், அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், என்னுடைய தலைமையில்,கட்சியின் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்கூறி, அந்த தீர்ப்பில் உள்ள நல்ல சாதகமான அம்சங்களை எல்லாம் எடுத்துக்கூறி, அடுத்தக்கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஏற்கெனவே தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழக முதல்வர் உடனான சந்திப்பின்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மிக தெளிவாக, தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம். எந்த தடையும் இல்லை. ஆனால், அதை நியாயப்படுத்த வேண்டும். வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த புள்ளி விவரங்களை வைத்து, இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்றும். ஒரு சமுதாயத்திற்கு குறிப்பிட்ட அளவில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும் 9-வது அட்டவணையிலே பாதுகாக்கப்பட்ட 69 சதவீத இட ஒதுக்கீட்டில் சட்டத்திருத்தம் தேவையில்லை என்றும், இதற்காக குடியரசுத் தலைவரிடம் செல்ல தேவையில்லை என்பது உள்ளிட்ட சாதகமான அம்சங்கள் குறித்து முதல்வரிடம் விளக்கி கூறினோம்.

புள்ளி விவரங்கள் இல்லை என அந்த தீர்பபில் குறிப்பிடப்பட்டிருந்தது. புள்ளி விவரங்கள் இருக்கிறது கூடுதல் விவரங்களை சேகரிக்க வேண்டும். எனவே அதை சேகரித்து சட்டமன்றத்தில் சட்டத்தைக் கொண்டுவந்து மீண்டும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக் கொண்டோம். முதல்வர் நிச்சயமாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்து நல்ல சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று கூறியிருக்கின்றார். இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வந்தால், எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. நிச்சயமாக அதை செய்யலாம், காரணம் புள்ளி விவரங்கள் இருக்கிறது, கூடுதல் விவரங்களைச் சேரிக்க வேண்டும் அவ்வளவுதான்.

பாமக அவசர செயற்குழுவில், நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார், அரசாங்கம் நினைத்தால், ஒரு வார காலத்துக்குள் இந்த தரவுகளை சேகரிக்காலம், சேகரித்து சட்ட வடிவம் கொண்டு வரலாம் என்று. தமிழக அரசு சார்பில் நல்ல மூத்த வழக்கறிஞர்களை வைத்துதான் வாதிட்டார்கள், அபிஷேக் மனுசிங்வி, முகுல் ரோஹ்தகி, ராகேஷ் திவேதி, உச்ச நீதிமன்றம் என்றாலே நல்ல மூத்த வழக்கறிஞர்கள் என்றால் இவர்கள்தான், நல்லபடியாக வாதிட்டார்கள். நல்ல முறையில்தான் தமிழக அரசு இந்த சட்டப் பிரச்சினையை கையாண்டு இருக்கிறது. இந்த சந்திப்பின்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸின் கடிதத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளோம்.

இது ஒரு சாதிக்கான பிரச்சினை இல்லை, சமூக நீதிப் பிரச்சினை. 1969-ல் நியமிக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், கூறியது தமிழ்நாட்டில் பெரிய சமூகங்கள் இரண்டு அதில், வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட சமூகமும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. வன்னியர் சமுதாயத்துக்கு இல்லை. தமிழகத்தில் ஒரு பெரிய சமுதாயம் மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறது, இந்த சமுதாயம் முன்னேறினால் தமிழகம் முன்னேறும் அந்த வகையிலே தமிழக முதல்வர் நேற்று சட்டப்பேரவையில் சமூகநீதி குறித்து பேசியிருக்கிறார். எனவே இது யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடும் கிடையாது, எதிரான செயலும் கிடையாது. இதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. எந்தெந்த சமூகங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறதோ, அதை முன்னுக்குக் கொண்டு வருவது அரசின் கடமை" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x