

கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தான் கிடார் இசைத்தபடி, புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை பாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அல்லுஅர்ஜுன் நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் புஷ்பா. இத்திரைப்படத்தின் பாடல்கள் தமிழ், தெலுங்கில் பிரபலமாகின.
இதில் தமிழில் பார்வை கற்பூர தீபமா, பேச்சே கல்யாணி ராகமா என்ற பாடல் தெலுங்கில் பங்கார மாயனே ஸ்ரீவள்ளி என தொடங்கும் இப்பாடலை இரு மொழிகளிலும் பாடகர் ஸ்ரீசித்ஸ்ரீராம் பாடியுள்ளார். மிகவும் இனிமையான பாடல் என்பதால் இப்பாடலுக்கென தனி ரசிகர்கள் உள்ளனர்.
இதனிடையே, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கிடார் இசைத்த வண்ணம் இப்பாடலை தெலுங்கில் பாடி 1.39 நிமிடம் கொண்ட காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு பதிவிட்டுள்ளார். மேலும் அவரது டுவிட்டர் பதிவில், "கடைசியில் நானும் ஸ்ரீவள்ளி பாடலை இசைத்துள்ளேன்.
நீண்ட நாள் வேலைக்கு பிறகு. தெலுங்கு புஷ்பா திரைப்படத்தில் சித்ஸ்ரீராமின் மற்றொரு மைல்கல். நான் இம்மொழியை பேசுவதில்லை. இதனால் தெலுங்கு பேசுபவர்கள் மற்றும் தெலுங்கு பாடகர்களிடம் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு தான் பாடி வீடியோவை பதிவிட்டுள்ளனர்.
இதைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும், தீராத பணிச் சுமைகளுக்கு இடையே அதிகாரிகள் மன அழுத்தத்தை குறைக்க இசைக் கருவிகள் இசைப்பது, பாடல் பாடுவது என்பது உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.