Published : 08 Apr 2022 05:23 AM
Last Updated : 08 Apr 2022 05:23 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும் - உயர் நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முந்தைய அதிமுக அரசு கடந்த 2020-ம் ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் எளிதாக இடம் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்களும், இந்த இடஒதுக்கீட்டை தங்களுக்கும் வழங்கக் கோரி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின்போது, ‘‘தமிழகத்தில் ஏற்கெனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. எஞ்சிய 31 சதவீதத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கிவிட்டால், பொதுப்பிரிவில் உள்ளமாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனரே’’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபில், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர், ‘‘மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு, 31 சதவீதத்தில் இருந்து வழங்கப்படவில்லை. மொத்த இடங்களில் இருந்துதான் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் நீட் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது’’ என வாதிட்டனர்.

உயர் கல்வித்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், ‘‘பின்தங்கிய நிலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருப்பது நியாயமானதுதான். இதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை’’ என வாதிட்டார்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ‘‘இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்’’ என கோரினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டதலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருவமாறு:

ஆணையத்தின் பரிந்துரைப்படி சட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு தனியாக ஆணையம் அமைத்து, சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து, அந்த ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படியே மாநில அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் இந்த கொள்கை முடிவை எதிர்க்க முடியாது. இவ்வாறு சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன.

நீட் தேர்வையோ அல்லது இடஒதுக்கீட்டையோ இந்த சட்டம் நீர்த்துப்போகச் செய்யவில்லை. மேலும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது என்பதால் தமிழக அரசின் இந்தச் சட்டம், தேசிய மருத்துவ ஆணைய விதிகளுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டத்தைக் கொண்டு வரும் முன்பாக அரசுப் பள்ளிகளில் படித்த வெறும் 6 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் இந்த சட்டம் வந்த பிறகு 435 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். இதன்மூலம் இந்த சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது.

பெற்றோரின் சராசரி ஆண்டு வருமானம்

குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோரது சராசரி ஆண்டு வருமானம் ரூ.46,686 ஆக உள்ளது. ஆனால் சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.4,68,413 ஆகவும், ஐசிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.4,77,263 ஆகவும் உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் 83 சதவீத தந்தையரும், 65 சதவீத தாயாரும் தினக்கூலி பணியாளர்கள். இதில் 3 சதவீதம் பேர் பழங்குடியினர். 32 சதவீதம் பேர் பட்டியலினத்தவர்கள். 37 சதவீதம் பேர் சீர்மரபினர்.

இடஒதுக்கீட்டுக்கான காரணங்களை ஆராயும்போது இந்த அம்சங்களையும் ஒதுக்கிவிட முடியாது. இடஒதுக்கீடு என்பது விதிவிலக்கல்ல, கட்டாயமானது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவத் துறையில் மிகச்சிறந்த திறமைசாலிகள் உள்ளனர். சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் எளிதாக, லாவகமாக செய்கின்றனர். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்களும் பல்வேறு தடைகளைத் தாண்டி மருத்துவர்களாக வலம் வர ஏதுவாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்தச் சட்டம் அரசியலமைப்பு சாசனத்துக்கு விரோதமானது அல்ல.

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு..

7.5 சதவீத இடஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டின் வரம்பை அதிகரிக்கவில்லை. அதேநேரம் அனைத்து பிரிவிலும் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் இந்த பலன் பொதுவாக சென்றடையும். நீதிபதி பொன்.கலையரசன் ஆணைய அறிக்கையில், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பச் சூழல், பொருளாதாரம், கட்டமைப்பு வசதி என அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பி்த்துள்ளது. அதன்படி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இடஒதுக்கீட்டு சலுகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது.

எனவே தமிழக அரசு முழுமையாக மனதை செலுத்தித்தான் இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. எனவே தமிழக அரசு மருத்துவபடிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வந்துள்ள இந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டு சட்டம் சட்டப்படி செல்லும். சட்டரீதியாக அனுமதிக்கத்தக்கது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு

அதேநேரம், நீதிபதி பொன்.கலையரசன் ஆணையத்தின் பரிந்துரைப்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை கண்டிப்பாக மறுஆய்வு செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்காத வகையில் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x