Published : 04 Apr 2016 08:18 AM
Last Updated : 04 Apr 2016 08:18 AM

சேலத்தில் பிரேமலதாவை கண்டித்து அதிமுக-வினர் திடீர் போராட்டம்: தங்கியிருந்த ஹோட்டல் முன்பு முற்றுகை

பிரேமலதாவை கண்டித்து சேலத்தில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் முன்பு அதிமுக-வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் நேற்று முன்தினம் இரவு தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை பிரச்சாரக் கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரேம லதா விஜயகாந்த், சேலம் 5 ரோடு அருகே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். நேற்று காலை பிரேமலதா தங்கியிருந்த ஹோட் டல் முன்பு அதிமுக மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர் திரண்டனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை பிரேமலதா அவதூறாக பேசி வருவ தாக குற்றம்சாட்டி ஹோட்டல் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து பிரேமலதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற சிலர் கருப்புக் கொடிகள் வைத்திருந்தனர்.

தகவல் அறிந்த சேலம் அழகாபுரம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பிரேமலதா கேள்வி

இந்த சம்பவத்துக்கு பிறகு பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் வெளியிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. முதல்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதைப் பற்றி பேசுவது எப்படி அவதூறாகும். இதுகுறித்து நான் எல்லா இடங்களிலும் பேசுவேன்.

தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படுவது போல் தெரியவில்லை. சிறுதாவூர் பங்களாவில் கோடி கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பலர் தெரிவித்தனர். ஆனால், 10 நாட்களுக்குப் பின்னரும் இதுதொடர்பாக சோதனை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. டெல்லியில் இருந்து வரும் தேர்தல் ஆணைய குழுவிடம் இது தொடர்பாக புகார் அளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

பிரேமலதாவுக்கு எதிராக அதிமுகவினர் திடீர் போராட்டம் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்புடையவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x