

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.1,856 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து பேசிய பின்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
* சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
* அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரே சட்டமாக தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம்கொண்டுவரப்படும்.
* மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.1,856.83கோடியில் குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.
* சென்னை மாநகராட்சியில் ரூ.400 கோடியிலும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.275கோடியிலும், பழுதடைந்தசாலைகள் மேம்படுத்தப்படும்.
* கோவை, ஓசூர், மதுரை, கடலூர், கரூர் மாநகராட்சிகள், விருத்தாசலம், ராணிப்பேட்டை,கூடலூர், கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட நகராட்சிகளில் ரூ.259.35 கோடியில்53 புதிய சந்தைகள் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம், கன்னிவாடி, சென்னிமலை உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் ரூ.25.85 கோடியில் 10 சந்தைகள் ஏற்படுத்தப்படும்.
* திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், சிதம்பரம், திருச்செந்தூர், குளச்சல், எடப்பாடி உள்ளிட்ட நகராட்சிகள், சாயர்புரம், திருவட்டாறு பேரூராட்சிகளில் ரூ.302.50 கோடியில் 24 புதியபேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
* நபார்டு திட்டத்தின் கீழ்ரூ.200.70 கோடியில் பேரூராட்சிகளில் சாலை மேம்படுத்தப்படும்.
* பேரூராட்சிகளில் 11,253 வீடற்ற ஏழைகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ்ஒரு வீட்டுக்கு ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.236.31 கோடி மானியம் வழங்கப்படும்.
* சென்னையில் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.93 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.
* சென்னை மாநகராட்சி பள்ளிகளின் கட்டிடங்களை மேம்படுத்துவது, மாணவர்களுக்கு மேஜை, நாற்காலி உள்ளிட்டதளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட பணிகள் ரூ.60 கோடியில் மேற்கொள்ளப்படும்.