Published : 08 Apr 2022 06:59 AM
Last Updated : 08 Apr 2022 06:59 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சித்ரா பவுர்ணமியையொட்டி தூய்மைப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, ’’கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுஇருந்த தடை உத்தரவு, தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏப்.15, 16 தேதிகளில் 15 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பாகும்.
அன்னதானத்துக்கு முன்பதிவு
சித்ரா பவுர்ணமிக்கு 40 இடங்களில் அன்னதானம் வழங்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குவோர் https://foscos.fssai.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்படாத இடங்களில் அன்னதானம் வழங்கினால் போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தள்ளுவண்டிகள் மூலம் வியாபாரம் செய்வோர் தங்களது விவரங்களை பதிவு செய்து முன்அனுமதி பெற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT