Published : 08 Apr 2022 06:20 AM
Last Updated : 08 Apr 2022 06:20 AM
திருப்பூர்: கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிய வெங்காயத்தை தரையில் கொட்டி ஒப்பாரி வைத்து விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.கே. சண்முகம், செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி உட்பட பலர் பங்கேற்றனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காய சாகுபடிக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வெங்காய சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவு செய்கிறோம். ஏக்கருக்கு சராசரியாக 5 டன் மகசூல் கிடைக்கும். தற்போதையவிலையில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்க அவற்றை ஏற்றுமதி செய்யவும் மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். கூட்டுறவுத்துறை மூலம் குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.40- க்கு கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்றனர். தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளேமேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க சென்றனர். அவர்களை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் தடுத்ததால், வாக்குவாதம் எழுந்தது. ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவுவாயில் கதவு பகுதியில் அமர்ந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் வரதராஜன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால்விவசாயிகள் சமரசம் அடைந்தனர். பின்னர் அனைவரும் ஆட்சியர்அலுவலகத்துக்குள் மனு அளிக்கஅனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT