

கோவை: ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர்வதற்கு ‘கேட்’ என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கேட் நுழைவுத் தேர்வை சென்னை, டெல்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி காரக்பூர் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியது.
மொத்தம் 100 மதிப்பெண் களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் தேர்வு நடைபெற்றது.
அதில், கோவை சிறுமுகையைச் சேர்ந்த மாணவர்ராம்பாலாஜி, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் தேர்வெழுதி 100-க்கு 78 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இதுதொடர்பாக ராம்பாலாஜி கூறும்போது, “தற்போது நான்சென்னை ஐஐடியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருகிறேன். கடந்த ஜூலை முதல் கேட் தேர்வுக்கு தயாராகி தேர்வெழுதினேன். தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கெனவே கடந்த டிசம்பரில்நடைபெற்ற வளாக நேர்முகத் தேர்வின் மூலம் பெங்களூருவில் உள்ள அமெரிக்காவின் டெக்சாஸை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தில் ‘அனலாக் இன்ஜினியர்’ பணி கிடைத்துள்ளது. எனவே, அதில் சேர முடிவு செய்துள்ளேன்”என்றார்.
எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன்கூறும்போது, “மேட்டுப்பாளையத்தில் உள்ள எங்களது பள்ளியில் படித்த மாணவர் கேட் தேர்வில் தேசிய அளவில்முதலிடம் பிடித்து எங்கள் பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடி தந்துள்ளார்” என்றார்.