Published : 08 Apr 2022 06:41 AM
Last Updated : 08 Apr 2022 06:41 AM

காஞ்சிபுரத்தில் ரூ.50 கோடியில் ரயில்வே மேம்பாலம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்

காணொலிக் காட்சி மூலம் காஞ்சிபுரத்தில் முதல்வர் திறந்து வைத்த ரயில்வே மேம்பாலம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.50.7 கோடியில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் வளர்ந்து வரும் நகரமாகவும், கோயில் நகரமாகவும் உள்ளது. இந்த நகரத்துக்குச் சுற்றுலாவுக்காகவும், பட்டுச் சேலைகள் எடுக்கவும், கோயில்களில் தரிசனம் செய்வதற்கும், தொழில் நிமித்தமாகவும் பலர் வந்து செல்கின்றனர்.

காஞ்சிபுரம் நகரத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாகக் காஞ்சிபுரம்-சென்னை செல்லும் சாலையின் இடையில் புதிய ரயில் நிலையம் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்தப் பகுதியில் ரயில் செல்லும்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

எனவே, இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கத் தமிழக அரசு சார்பில் ரூ.50.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. ரயில் பாதைக்கு வலது புறமும், இடதுபுறமும் மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் ரயில் பாதையைக் கடக்கும் இடத்தில் இணைப்பு போடப்படாமல் இருந்தது. பின்னர் இணைப்பு போடப்பட்டுக் கடந்த 6 மாதங்களாக முழுமையாக பணிகள் நிறைவு செய்யப்பட்டும் திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் ரயில் செல்லும் நேரங்களில் ரயில்வே கேட்டை கடக்க 20 நிமிடங்களுக்கும் மேல் ஆனதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டால் அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்குச் செல்பவர்களும் பாதிக்கப்பட்டனர். இந்த ரயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ரயில்வே மேம்பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து ரயில் வரும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x