Published : 10 Apr 2016 10:34 AM
Last Updated : 10 Apr 2016 10:34 AM

மதுவிலக்கு பற்றிய ஜெயலலிதாவின் அறிவிப்பு: கட்சித் தலைவர்கள் கருத்து

அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட் டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. மதுவின் தீமைக ளை விளக்கி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடர்ச்சியாக பல கட்டுரைகள் வெளியாயின. `தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தால் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கோப்பில்தான் முதல் கையெழுத்து போடப்படும்' என திமுக அறிவித்தது. இந்நிலையில் `அதிமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று வாக்குறுதி அளித்துள்ளார். அவரது இந்த வாக்குறுதி குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்)

பாமகவின் மதுவிலக்கு கோரிக் கையை ஏற்க மறுத்த ஜெயலலிதா, இது சாத்தியம் இல்லை என்று கூறினார். மதுவிலக்கு தொடர்பான பாமகவின் பிரச்சாரத்தை கண்டு அச்சம் அடைந்த ஜெயலலிதா படிப்படி யாக மதுவிலக்கை நடைமுறைப்படுத் துவதாக வெற்று வாக்குறுதியை அளித் துள்ளார். இதை மக்கள் நம்பவும் மாட்டார்கள். ஏமாறவும் மாட்டார்கள்.

நல்லகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்)

வாக்குகளைப் பெற மக்களை ஏமாற்றுவதற்கான அறிவிப்பு இது. பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது எதையும் கண்டுகொள்ளாதவர் ஜெயலலிதா.

தனது ஆட்சிக் காலத்தில் மது விற்ப னையை அதிகரிப்பதில்தான் அவர் ஆர்வம் காட்டினார். அதனால் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் அளிக்கும் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள். அவரது அறிவிப்பு நம்புவதற்கு உகந்ததல்ல.

இல.கணேசன் (பாஜக மூத்த தலைவர்)

படிப்படியாக மதுவிலக்கை அமல் படுத்துவேன் என ஜெயலலிதா கூறு வது தேர்தல் வாக்குறுதியே. தேர்த லுக்குப் பிறகு மதுவிலக்கை கொண்டு வருவார் என்பது கேள்விகுறி தான்.

குமரி அனந்தன் (தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்)

இத்தனை நாள் இந்த அறிவி்ப்பு வரவில்லை. சசிபெருமாள் இறந்த பிறகு இந்த அறிவிப்பு வரவில்லை. நான் 800 கிமீ தூரம் நடந்து சென்று மது ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொண்ட போது மயங்கி விழுந்தேன். அப்போதும் கூட இந்த அறிவிப்பு வரவில்லை. பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்று அறிவித்த பிறகு இப்போது தானும் மதுவிலக்கை படிப்படியாக கொண்டுவருவேன் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் சூழ்நிலை காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாரா? இல்லை தேர்தலின் காரணமாக இதை செய்துள்ளாரா? அல்லது உண்மையி லேயே மனசாட்சியை ஒருமுகப்படுத்தி மது தீயது என்ற எண்ணத்தில் இந்த அறிவிப்பை செய்துள்ளாராw என சிந்திக்கத் தோன்றுகிறது.

தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)

மதுவிலக்கினை படிப்படியாக அமல்படுத்துவேன் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்வார்களா என தெரிய வில்லை. மதுவிலக்கினை படிப்படி யாக அமல்படுத்துவேன் என கூறு வது நம்பகத்தன்மையை உருவாக்க வில்லை. மேலும், ஒரே கையெழுத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று முதல்வர் கூறியிருப்பது ஏற்க முடியாது.

பிஹாரில் சாத்தியமாவது ஏன் தமிழகத்தில் சாத்தியமாகாது? உண்மையிலேயே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்றால் ஒரே முறையில் அதை செயல்படுத்தி யிருக்க வேண்டும். எனவே, முதல் வரின் வாக்குறுதியை நம்ப முடியாது.

`தேர்தல் ஏமாற்று வேலை’

காந்தியவாதி சசிபெருமாளின் மகன் விவேக்:

முதல்வரின் அறிவிப்பு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மக்களை ஏமாற்றும் வேலை. மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று 8 மாதங்களுக்கு முன்னர் எனது தந்தை சசிபெருமாள் மார்த்தாண்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தார். அப்போது தமிழகம் முழுவதும் மதுவிலக்கு வேண்டி தீவிரமான போராட்டம் நடைபெற்றது. அப்போது, எனது தந்தையின் மரணம் குறித்து முதலமைச்சர் ஒரு அனுதாப அறிக்கைகூட வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x