Published : 13 Apr 2016 01:06 PM
Last Updated : 13 Apr 2016 01:06 PM

பழைய புகைப்பட போஸ்டருடன் ஒரு யுத்தம்!

‘அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு எதிராக தலைமைக்கு புகார்களை அனுப்பி உள்ளடி வேலை செய்வதுதான் அரசியல் பிரபலங்கள் மத்தியில் காலங்காலமாக உள்ள வழக்கம். திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியிலும் இது நடந்திருக்கிறது.

திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜூடன் தற்போது அதிமுக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.குணசேகரன் இருக்கும் புகைப்படத்தை வைத்து, ‘வெளியில் அம்மா விசுவாசம். உள்ளே திமுக சகவாசம். மாற்றுங்கள் அம்மா, மாற்றுங்கள். வேட்பாளரை மாற்றுங்கள்! இவண், தெற்கு சட்டமன்ற தொகுதி அஇஅதிமுக தொண்டர்கள்’ என வாசகங்கள் பொறித்து, போஸ்டர் அச்சடித்து திருப்பூர் நகர வீதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாநகர அதிமுகவினர் சிலரிடம் பேசியபோது, ‘கடந்த திமுக ஆட்சியில் செல்வராஜ் மேயராக இருந்தபோது, குணசேகரன் அதிமுக கவுன்சிலராக இருந்தார். அப்போது எடுத்த பழைய புகைப்படம்போல் இது உள்ளது. அதற்குப் பிறகு நடந்த தேர்தலில் கவுன்சிலராகி துணை மேயரானார் குணசேகரன். தற்போது, வேட்பாளராக குணசேகரன் அறிவிக்கப்பட்ட பின், அவருக்குப் போட்டியாக சீட் கிடைக்காமல் உள்ள அதிருப்தியாளர்கள் இந்த பழைய புகைப்படத்தை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டு அரசியல் குளிர்காய்ந்திருப்பதாக தோன்றுகிறது.

இதை ஒட்டியது யார் என்பதை கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல; உளவுத்துறை போலீஸாரும் கூட சல்லடை போடாத குறையாக தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்றனர்.

இதுகுறித்து துணை மேயர் சு.குணசேகரனிடம் பேசியபோது, “துணை மேயராக பதவியேற்கும் முன்பும், இதே புகைப்படத்தை வைத்துதான் அப்போது நான் அந்த பதவிக்கு வருவதை தடுக்கப் பார்த்தார்கள். தற்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால் அதே வேலையை யாரோ சிலர் செய்துள்ளனர். 1984-ம் ஆண்டு முதல், அதிமுகவில் இருந்துவருகிறேன். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் துளி கூட எனக்கு அதிருப்தி இல்லை’ என்றார்.

இதுகுறித்து திமுக திருப்பூர் மாவட்டச் செயலாளர் க.செல்வராஜிடம் பேசியபோது, ‘ நான் மேயராக இருந்த போது அவர் கவுன்சிலர் என்ற முறையில் வாழ்த்து சொன்னபோது எடுத்த படம் அது. அதை வைத்து அரசியல் செய்யும் போது நான் என்ன செய்யமுடியும்?’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x