Published : 07 Apr 2022 10:28 PM
Last Updated : 07 Apr 2022 10:28 PM

7.5% உள் இடஒதுக்கீடு தீர்ப்பு | 'திராவிட மாடல்' அரசின் சமூக நீதிப் பயணத்தின் 3-வது வெற்றி: ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர தொழிற் படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்கிற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 'திராவிட மாடல்' அரசின் சமூக நீதிப் பயணத்தின் மூன்றாவது வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று திமுகவினருக்கு எழுதிய மடல் வடிவிலான அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பின் வாயிலாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவம், தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு நிலை நிறுத்தப்பட்டு, எதிர்காலத் தலைமுறையின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டுள்ளது.

‘நீட்’ எனும் கொடுவாள், கிராமப்புற ஏழை எளிய மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, மாணவர்களின் உயிர்களை அநியாயமாகப் பறித்த நிலையில், அதற்கெதிரான சட்டப் போராட்டத்தையும் மக்கள் போராட்டத்தையும் உறுதியுடன் மேற்கொண்டது தி.மு.கழகம். நமது தோழமைக் கட்சிகளின் துணையுடன் பல போராட்டக் களங்களைக் கண்டோம்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எதிர்க்கட்சியான தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் துணையுடன் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் என்னவாயின என்பதை மறைத்து, தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான அரசியல் நாடகங்களை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய வேளையில், நமது போராட்ட வலிமையையும், மக்களின் கொந்தளிப்பான மனநிலையையும் சமாளிப்பதற்காக, நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் ஒப்புதலுக்காக அது கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், அன்றைய ஆட்சியாளர்கள் பாராமுகமாக இருந்தனர். அப்போதைய எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதற்காகப் போராடியது.

என் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பாக மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகே, அன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தப்பின்னர் அது நிறைவேற்றப்பட்டது.

கடந்த மே மாதத்தில் கழக ஆட்சி அமைந்ததும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் ஆகிய தொழிற் படிப்புகளிலும் போதிய வாய்ப்புகள் அமையவில்லை என்பதால், அந்தப் படிப்புகளிலும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க ஆவன செய்யும் வகையில், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி மேற்கண்ட தொழிற்படிப்புகளுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பயன்பெறும் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, கல்லூரிச் சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கும் நிகழ்வின்போது, அவர்களின் குடும்பச் சூழலை அறிந்துகொண்டு, அவர்களுக்கானக் கல்விக் கட்டணத்துடன், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம் உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும் என அறிவித்தேன். அதற்கான அரசாணைகளும் உடனடியாக வெளியிடப்பட்டன.

7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை ஆணை பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 7 ஆயிரத்து 876 பேர். இவர்களின் படிப்பு மற்றும் அவை சார்ந்த செலவுகளுக்காக 74 கோடியே 28 லட்ச ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 2022 பிப்ரவரி 17 வரை 6 ஆயிரத்து 100 மாணவர்களுக்கான கட்டணமாக அரசு சார்பில் 38 கோடியே 31 இலட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் இதர தொழிற்படிப்புகளில் வழங்கப்பட்ட 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. சமூகநீதிக் கொள்கையைப் பாதுகாப்பதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்திற்குக் காரணமான வலிமையானப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமுமாகும். அதன் நீட்சியாக இப்போதும் நாம் சட்டப் போராட்டத்தில் சளைக்காமல் பங்கேற்கிறோம்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டினைப் பாதுகாப்பதற்காக தமிழக அரசு சார்பில் வலிமையான வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசின் சார்பில், “ஒரே நாடு - ஒரே தகுதி (One Nation - One Merit) என்ற அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இடஒதுக்கீடு சட்டம் மருத்துவக் கல்வியின் தரத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும்” என்ற வாதம் வைக்கப்பட்டது.

மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், மாநிலக் கல்வி முறைக்கு எதிரான வகையிலும் மத்திய அரசின் தரப்பில் வைக்கப்பட்ட இத்தகைய வாதங்களுக்கு எதிரான வலுவான நியாயமான வாதங்களை முன்வைத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் தேவையை தமிழக அரசின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர்கள் திறம்பட எடுத்துரைத்தனர்.

பொதுநல மனுக்கள் மீதான வாதங்களைக் கேட்டறிந்து, சீர்தூக்கிப் பார்த்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்கும் உரிமை மாநில அரசுக்கு இருப்பதை உறுதி செய்து, இந்த ஒதுக்கீடு செல்லும் என்கிற நியாயத் தீர்ப்பினை வழங்கி, நீதியினை நிலைநாட்டியுள்ளது.

சிறப்புமிக்க இந்தத் தீர்ப்பு கிடைத்திடும் வகையில், உயர்நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைத்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கும், வழக்கிற்கான தரவுகளை வழங்குவதில் மிகுந்த அக்கறை செலுத்திய பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சட்டத்துறை உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட மாடல் அரசின் சமூகநீதிப் பயணத்தில், கடந்த 10 மாதங்களில் கிடைத்துள்ள மூன்றாவது தொடர் வெற்றி இது. மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முதல் வெற்றி. மருத்துவ மேற்படிப்புகளில் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இரண்டாவது வெற்றி.

அதன் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இதர தொழிற் படிப்புகளில் முன்னுரிமை வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லும் என்கிற உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மூன்றாவது வெற்றி. தொடர்ச்சியான இந்த ‘ஹாட்ரிக்’ வெற்றி என்பது, சமூக நீதிப் பயணத்தில் இன்னும் பல களங்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கான ஊக்கத்தையம், உத்வேகத்தையும் அளிக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x