Published : 07 Apr 2022 01:56 PM
Last Updated : 07 Apr 2022 01:56 PM

10.5% இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? - ஈபிஎஸ் 

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாதது ஏன்? என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவைக் கூட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று பேசியிருந்தார். அப்போது அதிமுக ஆட்சியில் இந்த சட்டத்தை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கும்போது, முந்தைய அதிமுக ஆட்சியில், அவசரமாக இந்த 10.5 சதவீத இடஒதுக்கீடை கொண்டு வந்து முறையாக அந்த சட்டத்தை நிறைவேற்றவில்லை என்று ஒரு தவறான செய்தியை சட்டமன்றத்தில் பதிவு செய்துள்ளார். அதிமுகவைப் பொருத்தவரைக்கும் எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலும், அவர்களது மறைவுக்குப் பின்னரும் அதனைத் தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டிருக்கிறோம்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு 26.2.2021 அன்று சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. அரசு மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை.

குறிப்பாக அம்பா சங்கர் ஆணையத்தின் அறிக்கை தொடர்பான தகவல் எதையுமே உயர் நீதிமன்றம் கிளையில் தாக்கல் செய்யவில்லை. அதிமுக அரசு சாதி வாரியாக கணக்கெடுப்பு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி , 6 மாத காலத்திற்குள் இந்த ஆணையம் தமிழ்நாடு முழுவதும் சாதி வாரியாக கணக்கெடுத்து அதை அறிக்கையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், ஆணையத்தின் காலத்தை நீட்டிக்கவில்லை. அந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இந்த விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சரியான தரவுகளை சமர்ப்பிக்கவில்லை. இதனால், இந்த தீர்ப்பு நமக்கு எதிராக வந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்துதான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். திமுக அரசுதான் மேல்முறையீடு செய்தது. முதல்வர், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டதாக கூறுகிறார். அப்படி என்றால், மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த வழக்கு நடைபெற்றபோது, ஏன் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை, முழுமையான ஆதாரங்களை ஏன் சமர்பிக்கவில்லை. முழுமையான தரவுகளை ஏன் கொடுக்கவில்லை.

இந்த வழக்கின் வாதத்திற்கு தேவையான ஆதாரங்களை எடுத்து வைக்கவில்லை. இதனால், மதுரை உயர் நீதிமன்றத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது. இதையெல்லாம் மறைத்து திமுக அரசு அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு பழிசுமத்துகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x