

சென்னை: "காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படுகிற கதர் துணியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை நேற்று மீண்டும் கூடியது. இரண்டாவது நாளான இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.
அப்போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், "திருச்செங்கோட்டில் கதர் துணி தயாரிக்கின்ற காந்தி ஆசிரமம் இருக்கிறது. 1925-ம் ஆண்டிலிருந்து அங்கு கதர் துணி தயாரிக்கிறார்கள். மூதறிஞர் ராஜாஜி 9 ஆண்டுகள் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்திருக்கிறார். மகாத்மா காந்தியடிகள் 2 முறை அங்கே வந்திருக்கிறார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அங்கே வந்திருக்கிறார். மிகவும் பிரசித்திப் பெற்ற இடமாக திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் இருக்கிறது. 26 ஏக்கர் நிலம் அந்த ஆசிரமத்தில் இருக்கிறது. அங்கு கதர் துணியை தயாரிக்கும் பணிகளை செய்ய வேண்டும். தயாரிப்பதில் பிரச்சினை இல்லை. அதை சந்தைப்படுத்துவதில் மிகவும் தடுமாறுகிறார்கள்.
அதே போல், காந்தி ஆசிரமங்கள் அனைத்து இன்றைக்கு மிகவும் கஷ்டமான சூழலில் இருக்கிறது. காந்தி ஆசிரமத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி போடப்படுகிறது. இதனால், காந்தி ஆசிரமங்கள் மிகப்பெரிய இடங்களைக் கொண்டிருந்தாலும், வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது. எனவே அங்கு தயாரிக்கப்படுகிற கதர் துணியை அரசே கொள்முதல் செய்து, அதை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தினால், தமிழகத்தில் இருக்கும் காந்தி ஆசிரமங்கள் எல்லாம் மறுபடியும் பிரகாசமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழக அரசு இதனை செய்ய ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர்.காந்தி, ”இந்த காதிகிராப்ட் திமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டபோது, கிட்டத்தட்ட 4 ஆயிரம் பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகாலத்தில் அந்த எண்ணிக்கை 400-ஆக குறைந்துவிட்டது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான், காதியைப் பொருத்தவரை, இதுவரை இல்லாத அளவுக்கு ஒவ்வொன்றாக பார்த்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். எனவே இந்த கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.