Published : 07 Apr 2022 07:05 AM
Last Updated : 07 Apr 2022 07:05 AM

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை நிரந்தரமாக தடுக்க ரூ.434 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அவற்றுக்குப் பதில் அளித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

சென்னை மாநகரம் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்கும் வகையில், 12 வெள்ளப் பணிகள் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பிலும், 2-வது கட்டமாக ரூ.184.22 கோடி மதிப்பிலும் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களில் 50 குறு பாசன கண்மாய்களைத் தரப்படுத்துதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் ரூ.33.43 கோடியில் நிறைவேற்றப்படும். கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு வடிநிலை பாசனக் கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைப்பு செய்யவும், வெளிப்புற நிதியுதவி பெறவும் வசதியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ரூ.31.15 கோடியில் மேற்கொள்ளப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும்செயற்கைக்கோள் உதவியுடன் சென்னை நகரம் மற்றும் அதன்சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளைக் கண்காணிக்கவும், நீரின் தன்மையை ஆராயவும் ரூ.5.50 கோடியில் செயலி உருவாக்கப்படும்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் 4 புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்கும் வகையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் ரூ.9.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கஸ்தூரிரெங்காபுரம் கிராமத்தில் ரூ.5 கோடியில் புதிதாக குளம் அமைக்கப்படும். ராதாபுரம் வட்டத்தில் இரு இடங்களில் கடல்நீர் உட்புகுதலைத் தடுக்கும் வகையில், ரூ.35 கோடியில் கடைமடை கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி மாவட்டங்களில் 5 இடங்களில் ரூ.84.30 கோடியில் புதிய அணைகள் கட்டப்படும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் 3 இடங்களில் நிலத்தடி நீர் செறிவை அதிகரிக்கும் வகையில் ரூ.88 கோடியில்தரைகீழ் தடுப்பணைகள் கட்டப்படும்.

கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர் உள்பட8 மாவட்டங்களில் ரூ.215 கோடியில் பாசனக் கட்டுமானங்கள்புனரமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மேலக்கால், கடம்பாகுளம் உபரிநீர் போக்கியில் ரூ.37.20 கோடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

கோவை, திண்டுக்கல், பெரம்பலூர், சேலம், திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 10 இடங்களில் ரூ.70.95 கோடியில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு, விளவங்கோடு வட்டங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ரூ.70 கோடி செலவில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஆறு, ஏரிகளில் மணல் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நீர்வளத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது, உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஐந்து ஆண்டுகளில் 1,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறியுள்ளோம். 140 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு வாக்கு கொடுத்திருந்தேன். கரோனா காரணமாக அதை நிறைவேற்ற முடியவில்லை. உரிய காலத்தில் தடுப்பணைகள் கட்டப்படும்.

புதிய அணைகள் கட்ட வேண்டும் என சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். புதிய அணைகள் கட்டுவதற்கு இடமே இல்லை. கருணாநிதி ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டன.

எனவே, தடுப்பணைகள் மூலம் வறண்ட நிலத்தை, வளம்கொழிக்கும் பூமியாக மாற்றும் திட்டத்தை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தும். ஏரிகளில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவற்றை வெட்டுவோருக்கு பரிசு வழங்கலாம். நீர்ப்பாசனத் துறையில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

சில மாவட்டங்களில் விவசாயிகள் மணல் எடுப்பதில் பிரச்சினை உள்ளதாகத் தெரிகிறது. ஆறு, ஏரிகளில் மணல் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதேபோல, செங்கல்சூளைகளுக்கு தேவையான மணல் எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x