Published : 11 Apr 2016 07:16 AM
Last Updated : 11 Apr 2016 07:16 AM

ஜிப்மர் ஆராய்ச்சிகளுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் காப்புரிமை: இயக்குநர் பரிஜா தகவல்

புதுச்சேரி ஜிப்மரில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் காப்புரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜிப்மர் இயக்குநர் பரிஜா தெரிவித்தார்.

புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஜிப்மரில் 45 ஆராய்ச்சி மாணவர்கள், 50-க்கும் மேற்பட்ட துறைகளின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு 400 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு அறிவியல் இதழ்களில் வெளியாகின்றன. ஏழை நோயாளிகளுக்கு பயன்தரும் வகையில் குறைந்த செலவில் தரமான மருத்துவ சாதனங்களை வடிவமைத்து அவற்றுக்கான காப்புரிமையை பெற வேண்டும் என்பது ஜிப்மரின் நோக்கம். இதற்காக ஜிப்மரில் அறிவுசார் சொத்துரிமை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜிப்மரில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமை பெறுவது, அதற்கான செலவுகளை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பிரதமரின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும்.

வரும் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் காரைக்கால் ஜிப்மர் கிளை தொடங்கப்படும். குறிப்பாக 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். பேராசிரியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிகளை கருத்தில் கொண்டு இப்பணிகள் நடக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக ஜிப்மர் அகாதெமி மையத்தில் அறிவுசார் சொத்துரிமை கொள்கை தொடர்பான பயிலரங்கம் நடைபெற்றது. “அறிவுசார் சொத்துரிமை கொள்கை” கையேட்டை வெளியிட்டு இயக்குநர் டாக்டர் பரிஜா பேசும்போது, ”நமது நாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் நமது நாட்டுக்கு அன்னிய செலாவணி இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ஆய்வுகளுக்கு காப்புரிமை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ், சண்டீகர் பிஜிஐ மருத்துவமனைகளில் ஆண்டுக்கு பல்வேறு காப்புரிமைகள் பெறப்படுகின்றன. ஜிப்மரிலும் ஆண்டுக்கு 5 காப்புரிமையாவது பெற திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x