ஆத்தூர் புத்திரகவுண்டம்பாளையம் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்: 146 அடி உயரம் உள்ள சுவாமியை வழிபட்ட பக்தர்கள்
சேலம்: ஆத்தூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் 146 அடி உயரம் உள்ள முருகன் சிலையுடன் கட்டப்பட்டுள்ள முத்துமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீமுத்துமலை முருகன் டிரஸ்ட் சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தில் சேலம் - சென்னை 4 வழிச் சாலையையொட்டி 146 அடி உயரமுள்ள முருகன் சிலையுடன் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலில் நேற்று காலை 10 மணிக்குமேல் முருகன் சிலைக்கும் கோயில் கோபுர கலசத்துக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு, பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கத்துடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி, 146 அடி உயரமுள்ள முருகப்பெருமானுக்கு, ஹெலிகாப்டரில் இருந்து வண்ண மலர்கள் தூவப்பட்டன. இதில், சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மலேசியா கோலாலம்பூரில் 140 அடி உயரம் உள்ள பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் முத்துமலை முருகன் சிலையை வடிவமைத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கிய கோயில் திருப்பணி 6 ஆண்டுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
